மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் (எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்) தொடர்ந்து 26வது ஆண்டாக சமத்துவப் பொங்கல் விழாவினை தமிழர் ஆய்வு மையம் கொண்டாடியது. விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பங்கேற்றார். மற்ற பண்டிகைகளுக்கும், பொங்கல் விழாவுக்கும் இடையேயான வித்தியாசத்தையும், எந்த வகையில் பொங்கல் விழா சிறப்பானது என்பது குறித்தும் விளக்கினார். உணவு, உணர்வு, உறவு ஆகியவற்றை வலியுறுத்தும் திருநாளாக பொங்கல் விழா அமைகிறது என மகிழ்ச்சியுறக் கூறினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் முனைவர் வெ. அழகப்பன், பொங்கல் விழா, பெருவிழாவாகக் கொண்டாடப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பொங்கல் திருநாள் மகிழ்ச்சியை வரவேற்பதாகவும், ஒற்றுமையையும், பாராம்பரியத்தையும் நினைவூட்டுவதாக அமைகிறது என்று அகர்வால் கண்மருத்துவமனையின் டாக்டர் தி. பத்ரி நாராயணன் கூறினார்.

விழாவில், சென்னை முதல் குமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்கு குறள்வழிச் சாலை என அரசு பெயர் சூட்டவேண்டும் என வலியுறுத்தி பங்கேற்ற அறிஞர்கள் பலர் பேசினர். சென்னை-குமரி நெடுஞ்சாலையை குறள்வழிச் சாலையாக அறிவிக்கக்கோரி கடந்த 25 ஆண்டுகளாக கடும் முயற்சிகளையும், பரப்புரைகளையும் தமிழர் ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது. குறள்வழிச் சாலை கோரிக்கை நிறைவேறும்பட்சத்தில், உலகளவில் தமிழர்தம் பெருமை மேலும் பரவிடவும், திருக்குறளின் மேன்மைதனை உலகோர் உணர்ந்திடவும் வாய்ப்பு ஏற்படும் என்பதை தமிழர் ஆய்வு மையம் திடமாக நம்புகிறது. குமரியில், வள்ளுவர் சிலை திறப்பு வெள்ளிவிழாயொட்டி கண்ணாடி பாலம் அமைத்து வானுயர நிற்கும் வள்ளுவர் சிலையை இன்னும் ஏராளமானோர் கண்டு பயனுற முதல்வர் வழிவகை செய்தார். அந்த வகையில் குமரி முதல் சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலை வள்ளுவர் பெயர்தாங்கட்டும். அதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்கட்டும் என தமிழர் ஆய்வு மைய தலைவர் வழக்கறிஞர் சி.சே. ராசன் தனது தலைமையுரையில் வலியுறுத்தினார்.

கீழடி முன்னாள் ஊராட்சித் தலைவர் பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், ஒருங்கிணந்த மதுரை மாவட்ட பாரம்பரிய விதை நெல் காப்பாளர் கருணாகர சேதுபதி, சமூக ஆய்வறிஞர் அலோசியஸ் இருதயம், திண்டுக்கல் சக்தி கலைக்குழு சகோதரிகள் சந்திரா, பெல்சி ஆகியோருக்கு தமிழர் ஆய்வு மையத்தின் 2025க்கான ஒளி விருதுகள் வழங்கப்பட்டன.

பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய எல்லோரும் நலமே? என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினை பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் வெளியிட, அகர்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பத்ரி நாராயணன் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் முனைவர் அழகப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவுக்கு வழக்கறிஞர்கள் சி.எம்.ஆறுமுகம், இராபர்ட் சந்திரகுமார், தமிழ்முனி எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியைகள் கெலன், ரோசிலா, இயற்கையம்மா, பரமேசுவரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் பேராசிரியர் அருள்ராஜ், அருள்திரு பால்மைக், மாமன்ற உறுப்பினர் அந்தோணியமமாள் சவரிராயன், வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன், ஜான் வின்சென்ட், சந்தணம், பால் பிரிட்டோ, திருநாவுக்கரசு, ராஜா, ஆசிரியர் தேவராஜ் அதிசயராஜ், எல்.எக்ஸ்.ஏ. சார்த்தோ, ஜெபக்கனி, தவழும் மாற்றுத்திறனாளி
கள் சங்கத் தலைவர் புஷ்பராஜ், சாத்தூர் சையது இப்ராகிம், மீர்பாட்சா, மனிதம் முருகன், சண்முக வேலு, கவிஞர் மு. முருகேசன்,தொழிற்சங்கத் தலைவர் மகபூப்ஜான், தியாகதீபம் பாலு, பல்சமய உரையாடல் இயக்க பெனடிக், சுற்றமும் நட்பும் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *