பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற மக்களால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதுதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந் தேதி கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக தொடர்ந்து 6 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடைத்தது. இதையொட்டி வௌியூர்களில் இருந்து வந்து திண்டுக்கல்லில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அதேபோல் வெளியூர்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் விரும்பினர். அவர்களும் பஸ், ரெயில் மூலம் திண்டுக்கல்லில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வந்து பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 6 நாட்கள் தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவடைந்தது.
இதையொட்டி திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்களும், வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வந்தவர்களும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதற்காக ரெயில், விரைவு பஸ்களில் பலர் முன்பதிவு செய்து இருந்தனர்.
அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள், முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் இன்று காலையில் இருந்தே திண்டுக்கல் பஸ், ரெயில் நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திண்டுக்கல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்கள், திண்டுக்கல் நகருக்குள் பகலில் வந்தாலும், இரவில் வராமல் சென்றுவிட்டன. இதனால் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட பஸ்களில் முண்டியடித்து சென்று மக்கள் இருக்கைகளில் இடம் பிடித்தனர். பலர் இருக்கை கிடைக்காமல் நின்றபடியே சிரமப்பட்டு பயணம் செய்தனர். பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதையும் காண முடிந்தது.