காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சிகுட்பட்ட அண்ணாமலையார் நகர், பாரி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
கோட்டையூர் பேரூராட்சி பாரி நகர், அண்ணாமலையார் நகர், நாகம்மை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களையும் தெரு நாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன.
இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக படுத்து உறங்கும் நாய்கள் தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன.
மேலும் தெரு நாய்களுக்குள் சண்டை நடக்கும் போது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது நாய்கள் விழும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் சிறுவர்கள் பீதி அடைகின்றனர்.
வயதான பெரியவர்களும் காலை, மாலை , பகல்,இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் சாலைகளில் நடந்து செல்கின்றனர். தெருக்களில் சண்டையிடும் நாய்கள் எங்கே நம்மீது விழுந்து கடித்துவிடுமோ என்று அச்சத்துடனே நடந்து சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் அதிக அளவிலான நாய்கள் கூட்டமாக குரைத்துக்கொண்டே செல்வதால் வீடுகளில் உள்ள மக்களுக்கும் தொந்தரவாக உள்ளது.இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது வழக்கம்.ஆனால் பேரூராட்சியில் கருத்தடை சிகிச்சை செய்யப்படவில்லை. இதனால் நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கோட்டையூர் பேரூராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.