செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் கடந்த ஐந்து நாட்களாக பேராசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

ஐ.சி.டி நிறுவனம் மற்றும் கல்லூரியின் உள் தர மதிப்பீட்டு பிரிவும் இணைந்து மைக்ரோ பவர் வணிக நுண்ணறிவு தர ஆய்வாளர் பயிற்சியை மேற்கொண்டது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி தலைமை தாங்கினார்.
கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ஐசிடி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முனைவர் வான்மதி செல்வி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, சென்னை ஐ.சி.டி நிறுவன மேலாளர் ஜெ. ஜெய்ரூஸ் மற்றும் மூத்த தொழில்நுட்ப மேலாளர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்று, ‘மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. தரவு ஆய்வாளர் பயிற்சி’ பற்றிய பாடத்திட்ட நெறிமுறைகளான தரப்பகுப்பாக்கம், தரவு சுத்தம் உள்ளிட்டவைகளை பற்றி விளக்கி பேசினர்.
இந்த பயிற்சி திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளை சார்ந்த 33 பேராசிரியர்கள் பயிற்சி பெற்றனர். மேலும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில் கணிதத் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.
.