செய்தியாளர். இரா.மோகன்
மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை கேட்டு கோரிக்கை விடுத்து வந்த நபர்களுக்கு வீட்டு மனை தராமல் சொந்த வீடு மற்றும் இடம் இருப்பவர்களுக்கு இலவச மனை வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி கிராம மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த செம்பனார்கோவில்அம்பேத்கர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்காமல் சொந்த வீடு வைத்துள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில் செம்பனார்கோவில் அம்பேத்கர் தெரு அருகில் அரசால் வாங்கப்பட்ட நத்தம் நிலம் உள்ளது. கடந்த 20.01.2025 அன்று சொந்தமாக வீடு வைத்திருக்கும் 8 நபர்கள் இலவச மனை பெற்றுள்ளார்கள். கோட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை முறையாகவும் முழுமையாகவும் விசாரணை செய்யாமல் பட்டா வழங்கி உள்ளனர்.
முழுமையாக விசாரணை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க உத்தரவிடுமாறு அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பத்து ஆண்டுகளாக இலவச குடியிருப்பு மனை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து வருவதாகவும் தற்போது வரை தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மனுவை பெற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.