தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி பகுதியில் மூன்று கழிவு மீன் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இந்தக் கழிவு மீன் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுப் புகையினால் துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக வீடுகளில் குடியிருக்க முடியவில்லை.நச்சுப் புகை காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. விவசாய நிலங்களில் நின்று விவசாயிகளால் வேலை செய்ய முடியவில்லை; விவசாய வேலைக்கு ஆள்கள் வரமறுக்கின்றனர். இந்த நிறுவனங்களின் கழிவு நீரை டேங்கர் லாரிகளில் கொண்டுவந்து ஊர்க் குளங்களிலும் ஓடைகளிலும் விவசாய நிலங்களிலும் இரவுடிகளின் துணையோடு நடு இரவில் ஊற்றிவிடுகின்றனர்.
கழிவுமீன் நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை வாருகால் வழியாக அவ்வப்போது அப்பகுதியிலுள்ள குளத்திற்குள் தேங்கும்படி விட்டுவிடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது; விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது; சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. அந்த நீரைக் குடிக்கும் கால்நடைகள் இறந்துபோய்விடுகின்றன.
என்று கூறி கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு பொட்டலூரணி ஊர் பொதுமக்கள் சார்பாக புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணித்தனர். ஒட்டுமொத்த ஊராட்சி உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். பொட்டலூரணி கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தாமல் அரசு அதிகாரிகள் புறக்கணித்துவந்தனர். எனவே ஒட்டுமொத்த பொட்டலூரணி மக்களும் ஒன்றுகூடி மக்கள் கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் இரண்டு கிராம சபைக் கூட்டங்களை நடத்திக் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோருதல் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதனைக் கண்டித்து கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சுவரொட்டி ஒட்டியும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் தொடர் நடவடிக்கைகளில் நாள் கூடல், மாதக்கூடல் நிகழச்சிகளையும் நடத்திவருகின்றனர்.
கழிவு மீன் நிறுவங்கள் மட்டுமன்றி பொட்டலூரணி பகுதி விவசாய நிலத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்காக ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் சுற்றளவிற்குள் நான்கு பெரிய குழிகளைத் தோண்டி வைத்துள்ளனர். அதனையும் மூடவேண்டும் என்று மக்கள் கோரிவருகின்றனர்.
பிப்ரவரி மாதத்திற்கான மாதக்கூடல் நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் போராட்டக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகம் தலைமை தாங்கினார். மற்றொரு பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டலத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்வேந்தன் சிறப்புரை ஆறினார். அவர்தம் உரையில், “கழிவுமீன் நிறுவங்கள், அணுக்கழிவு குழிகள் போன்ற நச்சுத் தன்மை படைத்த திட்டங்களைத் தூத்துக்குடிப் பகுதியில் கொண்டுவந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சுடுகாடாக மாற்றும் முயற்சியைக் கைவிடவேண்டும்; மாவட்ட நிர்வாகமும் மாநில அரசாங்கங்மும் இவற்றை அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார். கழிவு மீன் நிறுவங்களையும் அணுக்கழிவு குழிகளையும் மூடவேண்டும் என்றும் பொய்வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் மக்கள் முழக்கமிட்டனர். பால்ராஜ் நன்றி கூறினார்.
தொடர்பிறக்கு: ஈ. சங்கரநாராயணன் 9965868114