தஞ்சாவூர், தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல், 5-வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் 2010-ம் ஆண்டில் தமிழ்ப்பேராயம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ்ப் படிப்பு, வள்ளலார் சான்றிதழ்ப் படிப்பு முதலானவற்றோடு பல இலட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு, தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் எனப் பல்வேறு பணிகளை ஆற்றிவருகிறது. தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் சொல் தமிழா சொல் 2025 என்னும் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான பேச்சுப்போட்டியைத் தற்போது ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இப் பேச்சுப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

350-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 6 நடுவர்கள் என தஞ்சாவூரில் மண்டலப் போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி மு.காவியா முதல் பரிசு ரூ. 1,00,000, ராஜா சரபோஜி அரசு கல்லூரி மாணவன் ஜு. பிரைசிங் ஜோசுவா இரண்டாம் பரிசு ரூ.75,000, தமிழ்ப் பல்கலைக்கழகம் மாணவர் ச.வாசுதேவன் மூன்றாம் பரிசு ரூ. 50,000, ஆகிய மூன்று பரிசுகளை தஞ்சாவூர் சார்ந்த மாணவர்களே பெற்றார்கள்.

இப்போட்டியில் வெற்றி பெற்றோருக்குச் சான்றிதழ்களை தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு. நாகராசன் வழங்கி சிறப்பித்தார். மேலும் வெற்றியாளர்கள் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கத் தகுதிபெறுவர். இந்த போட்டிகளில் வென்றோருக்கான பரிசுத்தொகை மாநில அளவிலான இறுதிப்போட்டி அன்று வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *