தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் – அய்யனார்புரம் அருகே அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்குப் பாத்தியப்பட்ட திருமண மஹாலில் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரி வளாகம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட அய்யனார்புரம் பகுதி மற்றும் மதுரை – விளாத்திகுளம் நெடுஞ்சாலை பகுதியில் மற்றொரு இடம் ஆகிய பகுதிகளில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம் கட்டப்படுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியினை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.