கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி கருங்குழி பகுதியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்குழி பகுதியில் உள்ள மண்டப குளக்கரையில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்

இந்நிகழ்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தாவது,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதனை சீர்தூக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடை பெறுகிறது.

இன்றைய தினம் கருங்குழி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வனத்துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஊரகவளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் விதமாகவும், பசுமையான சூழலை உருவாக்கிடவும் அனைவரும் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திட்டம், பசுமை தமிழ்நாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலை பேணிகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொருப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அவ்வகையில் மகளிருக்கான விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு அலுவலகங்களை நாடி மக்கள் செல்லும் நிலையை மாற்றி மக்களை தேடி அரசு அலுவலர்கள் சென்று மக்களின் குறைகளை போக்கும் வண்ணம் இந்த அரசு செயல்படுகிறது.

பொதுமக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், மாணாக்கர்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்கும் வகையிலும் அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *