ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெரியஉடப்பங்குளம் கிராம பொட்டகுளத்து அய்யனார் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு சிறுமிகளின் கோலாட்ட நிகழ்ச்சியோடு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இக்கோவிலின் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 6 ம் தேதி காப்பு கட்டுடன்
துவங்கியது. பின்னர் வெள்ளிக்கிழமை கோவில் முன்பு பொங்கல் வைத்து
ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
பின்னர் நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக
முளைப்பாரியை கிராம பிள்ளையார் கோவில் முன்பு வைத்து பெண்கள் பக்தி பாடல் பாடி கும்மியடித்தனர். பின்னர் சிறுமிகளின் கோலாட்டம், கேரள செண்டை மேளம், ஜிப்லா கொட்டு, வானவேடிக்கை மேளதாளத்துடன் முனைப்பாரியை ஊர்வலமாக பெண்கள் தலையில் சுமந்து சென்று கண்மாய் கரையில் உள்ள அய்யனார் கோவிலை அடைந்து, முடிவில் குண்டாற்றில் பாரி கரைத்தனர்.
ஊர்வலத்தில் சிறுமிகள் ஏராளமானோர் கோலாட்டம் ஆடியபடி வழிநெடுகிலும் முளைப்பாரியை அழைத்து சென்றது கிராம மக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தியது. இதில் கிராமமக்கள் 1000 க்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை
பெரியஉடப்பங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.