திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையூறாக மாடுகள் சாலையில் சுற்றி திரிவதாக அடிக்கடி புகார் வந்தது. இதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை சாலையில் சுற்றித் திரிய விடக்கூடாது என உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் மாடுகளை உரிமையாளர்கள் கட்டாமல் சாலையில் சுற்றித்திரிய விட்டனர். இதுகுறித்து வலங்கைமான் வர்த்தக சங்க தலைவர் கே.குணசேகரன் மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் தஞ்சை மண்டல அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் தஞ்சை மண்டல அலுவலர் ஆகியோரின் அறிவுரைப்படி வலங்கைமான் பேரூராட்சி அலுவலர் சரவணன் தலைமையில் நேற்று முன்தினம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அம்பேத்குமார் மற்றும் பணியாளர்கள் கடைத்தெருவில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்தனர்.
பின்னர் அந்த மாடுகளை வாகனத்தில் ஏற்றி மயிலாடுதுறை அருகில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் தஞ்சை மண்டல அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு வர்த்தக சங்கம் மற்றும் பொது மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.