புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் ஏரியில் மண் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கள் ஏரியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூர்வாரப்படும் களிமண்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும் ஏரியில் உள்ள மண்ணை எடுத்து கரையினை மேம்படுத்தாமல் ஏரியில் வெட்டப்படும் மண் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்படுவதாகவும் இப்பகுதி மக்களால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் சில தினங்களுக்கு முன்பு பாகூர் ஏரியில் அரசு அனுமதி இன்றி ஜே சி பி இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டு லாரிகளில் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு தனியாருக்கு சொந்தமான இடங்களில் லோடு ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் வீதம் பணம் பெற்று அப்பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதாகவும் இதற்கு அரசு துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குறை கூறியுள்ளனர். இதன் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தலைமையில் தனது ஆதரவாளர்கள் மற்றும் என்ஆர் காங்கிரசார் காட்டுக்குப்பம் தாங்கள் ஏரிக்கரை பகுதிக்குச் சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டுனர். ஏரியில் மண் கொள்ளையில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரே மண் கொள்ளை போவதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
