வஉசி மேல்நிலைப் பள்ளி முதல்வர் அடிக்கடி நீண்ட விடுப்பில் செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு: புதிய முதல்வரை உடனே நியமிக்க வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வஉசி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அடிக்கடி நீண்ட விடுப்பில் செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதோடு, நிர்வாகமும் சீர்குலைந்துள்ளதால் புதிய முதல்வரை உடனே நியமிக்க அரசையும், கல்வித்துறையையும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு வஉசி பள்ளிக் கட்டிடத்தைக் கல்வித்துறையிடம் ஒப்படைத்து ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும் அது மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. மாணவர்கள் காலை 10.30 மணிக்கெல்லாம் வீதியில் சுற்றி வருகின்றனர். இது பற்றி விசாரிக்க பள்ளிக்குச் சென்றால் முதல்வரைப் பார்க்க முடியவில்லை. அடிக்கடி சொந்த ஊரான டெல்லிக்குச் சென்று விடுகிறார் என்றும், புதுச்சேரியில் இருந்தால் எந்த நேரம் பள்ளிக்கு வருவார், எப்போது போவார் என்று சொல்ல முடியாதென்றும் கூறுகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை குறிப்பாக இணை இயக்குநர் தற்போதைய வஉசி பள்ளி முதல்வருக்கு விதிகளை மீறி ஏராளமான சலுகைகள் அளித்து வருகிறார். இவர் வஉசி பள்ளிக்கு மாற்றலாகி வந்ததிலிருந்து விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த நாட்கள் மிகவும் குறைவு.

தற்போதைய வஉசி பள்ளி முதல்வர் அடிக்கடி குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு (maternity care) எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே அத்தகைய விடுப்பு எடுக்கலாமென்று விதிகள் இருக்கையில் அதை மீறி அவருக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. தவிர எப்போதெல்லாம் விடுப்பு எடுக்கிறாரோ அப்போதெல்லாம் சுப்ரமணிய பாரதியார் பள்ளி துணை முதல்வருக்கு வஉசி பள்ளியின் நிர்வாக அதிகாரம் ஒரே உத்தரவு (standing order) மூலம் வழங்கப்படுகிறது.

மேலும், தற்போதைய வஉசி பள்ளி முதல்வர் புதுச்சேரியில் பணியில் சேர்ந்ததில் இருந்தே பயிற்சிக் காலம் (Probation period) முடியும் முன்பே மாதக்கணக்கில் விடுப்பு எடுத்ததால் ஊதியம் வழங்கப்படாமல், நீண்ட நாட்களுக்குப் பிறகே விடுப்பு நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளில் ஓராண்டுக்கும் மேலாக விடுப்பு எடுத்துள்ளதாகவும், 2019ஆம் ஆண்டில் மட்டுமே அவருக்கு கல்வித்துறை 200 நாட்களுக்கு மேல் விடுப்பு அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஊதியம் நிறுத்தப்பட்டதில் இருந்தே அவரது மாதக் கணக்கிலான விடுப்பு தவறானதென்று தெரிகிறது. அவ்வாறு இருக்க பின்னாளில் ஊதியம் வழங்கி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்றாட பள்ளி நடவடிக்கைகளில் ஈடுபடாததோடு தற்போதைய வஉசி பள்ளி முதல்வர் நிர்வாகத்திலும் திறனில்லாமல் உள்ளார். வஉசி பள்ளியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைத் தொகைக்குப் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரித் தொகை இதுவரையில் வருமான வரித்துறைக்குச் செலுத்தப்படாமல் பள்ளியின் முதல்வர் கணக்கிலேயே உள்ளது. பணி ஒய்வு பெற்று வருமான வரியும் வசூலிக்கப்பட்டவர்களுக்குப் பின்னாளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் துணை முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட்ட போது வஉசி பள்ளியைத் தேர்ந்தெடுத்த துணை முதல்வர் ஏன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. இணை இயக்குநருக்கு வேண்டியவர் என்பதாலோ அல்லது வேறு யாரையும் பழி வாங்கும் நோக்கத்திலோ மாற்றப்பட்டாரா?

நூற்றாண்டு கடந்த வஉசி பள்ளி மாணவர்கள் படிப்பும் எதிர்காலமும் குறித்து பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கக் குறைவும் ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சுசீலாபாய் மேனிலைப் பள்ளித் துணை முதல்வரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது இடையில் சுமார் ஓராண்டைத் தவிர அப்பள்ளியிலேயே பணியில் இருக்கிறார். அவர் தன்னை நிழல் இணை இயக்குநர் என்றும், தான் சொல்வதையே இணை இயக்குநர் கேட்பாரென்றும் கூறிக் கொள்கிறார். இதனால்தான் இவருக்கு அப்படியொரு சலுகை வழங்கப்படுகிறதா?

மாணவர்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாது கல்வித்துறையிலும் ஆசிரியர்களிடையிலும் அரசியல் செய்து கொண்டு வேண்டியவர்களுக்கு அவர்கள் கேட்கும் பள்ளிக்கு மாற்றல் கொடுத்தும் வேண்டாதவர்களைப் பழிவாங்கியும் செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வி இணை இயக்குநரை உடனடியாக மாற்றம் செய்தால்தான் பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் சரியாகும். இல்லையென்றால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளும் சீரழியும், அரசுப் பள்ளி மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவர். மாணவர்கள் சீரழிந்தால் நாடே சீரழியும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, நிர்வாகத் திறனின்றி பள்ளி மாணவர்கள் மீது அக்கறையில்லாத தற்போதைய வஉசி பள்ளி முதல்வரை மாற்றி, புதிய முதல்வரை உடனே நியமிக்க வேண்டுமென கல்வியமைச்சர், கல்வித்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *