நோய் நாடி நோயின் முதல் நாடி பேராசிரியர் முனைவர் செ. பெரியாண்டி எழுதிய சிறப்புக் கட்டுரை…

சமீபத்தில் புதுவையில் ஒரு சின்னஞ் சிறு குழந்தைக்கு நடந்த கொடுமை மனிதர்களின் மன சாட்சியை உலுக்கியது.

இப்படித் தான் மனித வாழ்வு அமைய வேண்டுமா, இந்த அளவுக்கு மனிதர்கள் கொடூரமாக வாழ்கிறார்களா என்று ஒரு நிமிடம் அனைவரையும் யோசிக்க வைத்தது.

இத்தகைய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்ன, இனிமேல் இத்தகைய கொடுமைகள் நடவாமல் பார்த்துக் கொள்வது எப்படி. இந்த எண்ணம் எழாதவர்கள் இருக்க முடியாது. அரசாங்கம் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.

குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. பெண்களும் ஆண்களும் நடுரோட்டில் கோஷம் எழுப்பி தங்களுடைய குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில மீனவர்கள் கடலில் ஆர்த்திக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஆனால் இது நிரந்தர தீர்வா, இனிமேல் இத்தகைய குற்றங்கள் நடவாமல் நின்று விடுமா ?

கண்ணுக்கு நன்கு தெரிந்த காரணம் கஞ்சா என்று அனைவரும் சொல்கிறார்கள். கஞ்சா இவ்வளவு பெரிய வக்கிரமத்தையும் கொடூர சிந்தனையும் கொடுக்குமா? .

ஏற்கனவே மனதில் புதைந்திருந்த வக்கிரமத்தை கொலைவெறியை வேண்டுமானால் கஞ்சா கொஞ்சம் வெளிக் கொணர்ந்திருக்கலாம். ஆனால் உள்ளே ஒளிந்திருக்கும், சந்தர்பம் தேடி அலைந்து கொண்டிருக்கும், மிருக வெறியே அடிப்படை காரணம்.

நல்ல வழியில் மட்டும் தான் மனித வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஒழுக்கம் அற்ற மனநிலைதான் காரணம். கஞ்சா மற்றும் இதர போதைப் பொருள் மனித வாழ்க்கையை சீரழிக்கக் கூடியது என்று தெரிந்தும் அதை ஏன் தயாரிப்பு செய்து அதை குழந்தைகளை, இளைஞர்களை குறிவைத்து விற்கிறார்கள்.

யார் எக்கேடு கேட்டுப் போனால் நமக்கென்ன, நமக்கு பணம் வந்து சேர்ந்தால் போதும் என்ற நினைப்பு தானே? குறுக்கு வழியில் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவில் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறிதானே?

பணம் பணம் என்று இன்றைய சமுதாயம் ஏன் இப்படி அலைகிறது. பணத்திற்காக எந்த தவறையும் செய்ய கொஞ்சம் கூட தயங்காதவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்களே ஏன்?

இதற்கெல்லாம் காரணம் தலைவர்கள் தாம், தலைவர்கள் தவறான வழியில் வாழ்ந்து காட்டும் போது, அது தவறு என்று சுற்றி இருக்கும் சமுதாயம் எப்படி நினைக்கும்.

தலைவர்கள் கோடியில் புரள வேண்டும் என்று நினைக்கிறார்கள், மிகப் பெரிய ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும், எதோ சொர்க்கத்தில் வாழ்பவர்களாக தங்களை காட்டிக் கொள்ள வேண்டும் நினைக்கிறார்கள், அதற்காக நிறைய பணம் சேர்க்கிறார்கள், குறுகிய காலத்தில் நிறைய பணம் சேர்க்கிறார்கள், அதற்காக தவறான கொடூரமான வழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதற்காக கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்றாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். அதைப் பார்க்கும் சமுதாயம் எப்படி நல்லவனாக வாழ முயற்சி செய்யும். எப்படி ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும், எப்படி தர்மங்களை மதிக்கும். பிறகு எப்படி நெஞ்சைப் பிளக்கும் காரியங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும்.

இந்தத் தலைவர்களுக்கு எதற்கு இத்தனை கோடி பணம் தேவைப் படுகிறது, எதற்காக இவ்வளவு தவறுகள் செய்து பணம் சேர்க்கிறார்கள். எல்லோரும் ஒருமித்த கருத்தில் சொல்வது தேர்தலுக்கு பணம் தேவைப் படுகிறது என்பது தான்.

தேர்தலுக்கு எதற்கு பணம், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காகத் தான். ஆக எல்லா கொடூர தவறுகளுக்கும் அடிப்படையில் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதில்தான் நிற்கிறது. ஓட்டுக்கு பணம் என்பதின் சிந்தனைக்கு பின் ஜனநாயகம் மட்டும் படுகொலை செய்யப் படுவதில்லை, சமுதாய மாண்புகளும், தனிமனித ஒழுக்கங்களும் அல்லவா கொலை செய்யப் படுகிறது. ஆனால் கஞ்சாவுக் கெதிராக போராடும், குழந்தையின் கொடூர கொலைக்கெதிராக போராடும் எந்த சமூக இயக்கங்களும், கட்சிகளும், இதற்கெல்லாம் மூல காரணமாகிய எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற மனநிலையும், பணம் கொடுத்து ஓட்டு வாங்கவேண்டும் என்ற மனநிலையும், பணம் கொடுப்பவர்கள் தவறானவர்களாக இருந்தாலும் ஒட்டு போடும் மனநிலையை எதிர்த்து குரல் கொடுப்பதில்லையே, போராட்டம் நடத்துவதில்லையே. அப்படியாயின் ஒரு குழந்தையின் படுகொலைக்குப் பின் யார் இருக்கிறார்கள்?

சமுதாயத்தில் இன்று பெருகிக் காணப்படும் அதீத பாலுணர்வுக்கு, வக்கிர உணர்ச்சிகளுக்கு யார் காரணம். திரைப்படங்களில் காட்டப் படும் வக்கிர காட்சிகளும், கைப்பேசியில் கொட்டிக் கிடக்கும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளும், அவர்கள் தினம் உண்ணும் உணவில் கலந்துள்ள பாலுணர்வை தூண்டக் கூடிய வேதிப் பொருட்களும் தானே. இதெல்லாம் அரசாங்கத்திற்கோ, சினிமாக் காரர்களுக்கோ, செல்போன் தயாரிப்பாளர்களுக்கோ, உணவு பொருளில் வேதிப் பொருட்களை கலப்பவர்களுக்கோ தெரியாதா ?.

தெரியும் நன்றாகத் தெரியும். தெரிந்துதான் செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவை பணம், பணத்திற்காக எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்வார்கள். அவர்களிடத்தில் எந்த தனிமனித ஒழுக்கமோ சமுதாய ஒழுக்கமோ இல்லை. அதைப் பார்த்து வாழ்கின்ற, வளர்கின்ற சாதாரண மனிதருக்கு எப்படி தனிமனித ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் வரும் ?.

குழந்தையின் கொடூர கொலைக்கெதிராக போராடும் சமூக இயக்கங்களும், கட்சிகளும், இதற்கெல்லாம் மூல காரணமாகிய வக்கிர காட்சிகளை காட்டி மனித மூளைக்குள் பாலுணர்வையும் கொலை வெறியையும் ஊட்டும் ஊடகங்களுக்கு எதிராக, பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அரசு கொள்கைகளுக்கு எதிராக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டாமா?, போராட்டம் நடத்த வேண்டாமா?.

ஆக இதுபோன்ற கொடூரமான செயல் பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம் காக்கப் படவேண்டும் என்றால், எல்லாவித தவறுகளும் தவறுகள் தான் அவற்றை எல்லாவற்றையும் எதிர்க்கும் மன நிலையை மக்கள், தலைவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போடுதல், போதைப் பொருள் மற்றும் மது அருந்துதல், தவறு செய்து பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பது போன்ற அடிப்படைத் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அதுபோல ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே மாணவ செல்வங்களிடம் பெற்றோர் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள் நல்லொழுக்க நெறிமுறைகளை கூடுதல் கவனம் செலுத்தி பயிற்றுவிக்க வேண்டும். அத்தகையை தனிமனித கட்டுப் பாடுகளே, ஒழுக்கங்களே சமுதாயத்தை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற இயலும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *