நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, ஜோதி மணி உள்ளிட்ட எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும், அம்பேத்கர் குறித்து தவறான கருத்து தெரிவித்ததிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்பிக்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.