புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதும், அதன் காரணமாக இரு பெண்கள் உயிரிழந்த சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் சிக்கன் குனியா, மலேரியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜிப்மரில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறுவதான செய்திகள் இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் கடந்த ஆண்டை காட்டிலும் 50 சதவீதம் கூடுதல் என சுகாதாரத் துறை தெரிவித்து பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளது. காய்ச்சலுக்கான காரணமாக உள்ள ஏடிஎஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், அரசு இத்துடன் நின்றுவிடாமல் டெங்கு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதா என்பது கேள்விக்குறி?. மக்களை எச்சரிப்பதுடன் தனது பணி முடிந்துவிட்டதாக அரசு கருதுவதும், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் சுனக்கம் காட்டுவதும் கண்டிக்கத்தக்கதாகும். புதுச்சேரியில் 15க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணி செய்கின்றனர். எந்தவித களப்பணியிலும் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பது வாடிக்கை. இவர்களில் ஓரிருவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து அதில் சுகாதாரத் துறை அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வைத்து களப்பணியில் ஈடுபடுத்தினால் இதனை தடுப்பது என்பதும், பொதுமக்களின் ஒத்துழைப்பு பெருகும் என்பதும் உண்மை. இதை எதையுமே இந்த அரசு செய்யவில்லை. சாதாரண நாட்களில் கொசுத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மருந்து அடிக்கும் பணியைக் கூட அரசு மேற்கொண்டதாக செய்தியில்லை. சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் கூட ஈடுபடவில்லை. தொகுதி வாரியான சட்டமன்ற உறுப்பினர்களையும், அவர்கள் தொடர்பு உள்ளவர்களையும் இதில் ஈடுபடுத்தவும் அரசு தவறியுள்ளது.

நம்மைப் போல் டெங்கு காய்ச்சல் பாதித்துள்ள அண்டை மாநிலமான தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க அம்மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, பூச்சியல் ஆய்வுப் பணி மேற்கொள்வது, அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் செயல்படுவது, டெங்குவிற்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ரத்த அணுக்கல், பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது, டெங்குவை கண்டறியும் பரிசோனை மையங்களை அதிகரிப்பது மட்டுமல்லாது, பாரம்பரிய மருந்துகளான நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 25 ஆயிரம் களப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லமால் கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அரசு மருத்துவமனைகளில் நேரடி சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், புதுச்சேரியில் சுகாதாரத் துறை என்பது ஒன்று செயல்படுகிறதா என்பதே தெரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகரெங்கும் டெங்கு விழிப்புணர்வு பதாகைகள் அமைத்து விளக்கம் அளித்தும், பொதுமக்களை நேரிடையாக சந்தித்து எச்சரித்தும், முன்னெச்சரிக்கையாக நிலவேம்புக் கசாயம் கொடுத்தும் மேற்கொண்டு வருகின்றது போன்ற பணிகளை இந்த அரசு செய்யவில்லை என்பது வெட்ககேடானது.

தான் ஒரு மருத்துவ பட்டதாரி என்றும் மருத்துவத்தில் புதுச்சேரி முன்னிலை வகிக்கிறது என்றும் வாராவாரம் விளம்பரப்படுத்தி வரும் ஆளுநர் தமிழிசை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தற்போது தமிழக அரசியலில் நேரடி கவனம் செலுத்துகின்ற காரணத்தால் புதுச்சேரி மாநில டெங்கு காய்ச்சலைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. டெங்குவால் இரு பெண்கள் உயிர்நீத்த பொழுது அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் சேவைகள் பற்றியெல்லாம் எங்களுக்கு கணக்கில்லை என்று தட்டிக்கழித்தவர் தான் ஆளுநர்.

ஆகவே, இதில் மேலும் மெத்தனம் காட்டாமல் அரசு துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும். இல்லையேல் பொதுமக்களை அழைத்து இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க திமுக தயங்காது என அரசை எச்சரிக்கிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *