புதுச்சேரி காந்தி வீதியில் செயல்பட்டு வந்த ‘டி.கே.டி. கேஷ்வ்ஸ்’ என்ற முந்திரி பருப்புக் கடையை அங்கு வேலை செய்த கோகுல் என்பவர் போலி ஆவணம் தயாரித்து, வயதான உரிமையாளரின் கையெழுத்தைப் போட்டு கடையை அபகரிக்க முயற்சித்தார்.

இதனை அறிந்த சமூக நல அமைப்புகள் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் உடன் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியக்கடை ஆய்வாளர் ஜெய்சங்கர் பாதிக்கப்பட்டவர் பக்கம் இல்லாமல் அபகரிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சமூக நல அமைப்புகள் ஆய்வாளர் ஜெய்சங்கர் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவும், கடை அபகரிக்க முயற்சித்தவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர், ஆட்சியர், துணை ஆட்சியர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் அளித்தனர்.

அதன் பின்பு காவல்துறை உயரதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்ததில் அவை போலியானவை என்று தெரிந்துள்ளது. இதன் பின்னர் கடையை அபகரிக்க முயற்சித்த கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோகுலை கைது செய்யவில்லை.

கடை அபகரிப்புக் குற்றவாளியை கைது செய்யாமல் அவரைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளியை கைது செய்யவும் கோரி சமூக நல அமைப்புகள் சார்பில் சென்ற 06.02.2024 அன்று பெரியக்கடை காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடந்தது.

பின்னர் நேற்று (07.02.2024) சமூக நல அமைப்புத் தலைவர்கள் டிஜிபியை சந்திக்க சென்றனர். அப்போது அங்கிருந்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) சமூக நல அமைப்புத் தலைவர்களிடம் இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், மூடப்பட்டுள்ள கடையைத் திறக்கவும் கூறினார்.

இந்நிலையில் நேற்று (07.02.2024) மாலை 5 மணியளவில் கடையின் உரிமையாளர் கடையைத் திறந்து வியாபாரம் செய்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி அவர்கள், சமூக நல அமைப்பினர் உடனிருந்தனர்.

கடை அபகரிப்பைத் தடுக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் கடையின் உரிமையாளர், அவரது குடும்பத்தினர் நன்றி கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *