புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றி.

இந்துத்துவா அமைப்பை வீழ்த்திக்காட்டிய தோழர்களுக்கு வாழ்த்துகள்-சு. வெங்கடேசன் எம் பி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்
இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றி எளிதானதல்ல.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் அனைத்து நிர்வாக இயந்திரங்களும் காவிமயமாக்கப்பட்டிருந்தது. ஊழல்களும் நிறைந்திருந்தன. உதாரணமாக 60க்கும் மேற்பட்ட புதிய பேராசிரியர்கள் இந்துத்துவா சக்திகளாகவே நியமிக்கப்பட்டு
இருந்தனர்.

மேலும் பேராசிரியர்களில் ஒரு பகுதியினர் நேரடியாக ஆர்எஸ்எஸ் வகுப்புகளை நடத்தக் கூடியவர்களாக இருந்தனர்.
இவைகளுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் விடாது போராடியது. குறிப்பாக கல்விக் கட்டண உயர்வு, புதிய கல்விக் கொள்கை, பல்கலைக்கழகத்தின் காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் பழிவாங்கப்பட்டு பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்கப்பட்டனர். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்திருந்தது.

பல்கலைக்கழகத்தின் இப்பிரச்சனைகள் குறித்து ஒன்றிய கல்வி அமைச்சரின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் பல முறை எடுத்துச்சென்றிருக்கிறேன்.

எண்ணற்ற பழிவாங்கல்களையும் இன்னல்களையும் எதிர்த்து புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து இயக்கம் நடத்திய ஒரே அமைப்பு இந்திய மாணவர் சங்கம் மட்டுமே. களத்திலும், நீதிமன்றத்திலும் விடாது போராடியது.

இந்த பின்னணியில் தான் இந்த முறை தேர்தல் களத்தை எதிர் கொண்டது.இந்திய மாணவர் சங்கமும், பகுஜன் மாணவர் அமைப்பு இணைந்து இத்தேர்தலைச் சந்தித்தது.

நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற இத்தேர்தலில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் தொடங்கியதுமே 12 இடங்களில் இந்திய மாணவர் சங்க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் வெற்றியைப் பதிவுச் செய்தனர். சமுதாயக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 8 பிரதிநிதிகளும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களே. இவர்களுக்கு எதிராக கல்லூரி இந்துதுவா பேராசிரியர்களால் நிறுத்தப்பட்ட அனைவரும் தோல்வியைச் சந்தித்தனர். இதில் இந்திய மாணவர் சங்கம் 55 இடங்களையும், இணைந்து போட்டியிட்ட பகுஜன் மாணவர் அமைப்பு மூன்று இடங்களையும் பெற்று மகத்தான வெற்றியை பெற்றது.

இவ் வெற்றிக்குப் பின் இரண்டாம் கட்ட 15 மாணவர்களை கொண்ட நிர்வாகக் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாணவிகளே வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இவ் வெற்றி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்த இந்துத்துவா சக்திகளுக்கும், காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கும் பலத்த அடியை கொடுத்திருக்கிறது.

எதிர்த்துப் போட்டியிட்ட அம்பேத்கர் மாணவர் அமைப்பு, தேசிய மாணவர் காங்கிரஸ், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் இணைந்து 19 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி மாணவர் அமைப்பு 24 இடங்களையும், சுயேச்சை 3 இடங்களையும் பெற்று தோல்வியை சந்தித்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் காவிமயமாக்கலுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய இந்திய மாணவர் சங்கத்திற்கு பெரும் வெற்றியை தந்துள்ளனர்.புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிற கல்வி நிறுவனங்களிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்.

இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தலைவர் காயத்ரி எஸ் குமார், துணைத் தலைவர் :நசிகா, செயலாளர்: அபூர்வா எம் நாயக். உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *