தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது
புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் தங்களது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளர்ச்சியைக் காண வேண்டும் என்பதே எனது அரசின் எண்ணம். விவசாய பெருமக்கள், இளைஞர்கள், மகளிர், மீனவர்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றம் பெறும் வகையில் அரசின் திட்டங்கள் சிறப்பாக, காலத்தோடு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பல ஆண்டுகளாக பல்வேறு அரசு துறைகளில் நிரப்பப்படாமல் இருந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரும் அரசாக எனது அரசு விளங்குவதை அனைவரும் அறிவர். அதுபோல், நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்பட்டது. நியாய விலைக் கடைகள் மூலம் இலவச அரிசி தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கூடுதலாக ரூ.1,000/- உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக அனைத்துக் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 3.65 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. ஆரியபாளையம், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.75.52 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படி, எனது அரசு கொண்டு வரும் திட்டங்களையும், அதன் மூலம் அடையும் பயன்களையும் மக்கள் சொல்வதிலிருந்து, அரசு செயல்படுத்தும் திட்டங்களின் வெற்றியை உணர முடிகிறது. மக்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப இன்னும் வேகமான வளர்ச்சியை இந்தப் புத்தாண்டு கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறேன். அதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நல்லாதரவையும் அரசுக்கு நீங்கள் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டு வருவதாக அமையட்டும். உங்கள் வாழ்வின் பாதை அன்பாலும் வெற்றியாலும் நிரப்பப்படட்டும் என்று கூறி, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்